444. அணுசக்தி ஒப்பந்தம், இடதுசாரிகள், பிரதமர், ஒபாமா ...
பத்து நாட்களுக்கு முன் நமது பிரதமர் மன்மோகன், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் தான் ராஜினாமா செய்து விடப் போவதாக (சோனியாவுடன் ஒரு நாடகம் நடத்தியதாக) செய்தி அடிபட்டது. நியாயமாக, விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறி, ஏழை எளிய மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கும் பிரதமரும், நிதி அமைச்சரும் ஏற்கனவே பதவி விலகி இருக்க வேண்டியவர்கள். அந்தக் காரணம் பொருத்தமானதாகவும் இருந்திருக்கும் ! நாளுக்கு நாள் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கும் Inflation Index பற்றி துளியும் கவலையின்றி, கவைக்குதவாத அணுஆயுத ஒப்பந்தம் ஒன்றைப் பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நமது பிரதமரைப் பார்த்தால், ஒரே சமயத்தில் வருத்தமாகவும் / காமெடியாகவும் உள்ளது !!!
ஆகஸ்ட் 2006 திட்டக் கமிஷன் அறிக்கை ஒன்று, 2031-32 வரை இந்தியாவின் ஆண்டொன்றுக்கான 8 சதவிகித GDP தொடர் வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதும் 11 வகை எரிபொருள் கலப்புகள் (Fuel Mix) தரவல்ல சாதக/பாதகங்கள் குறித்துப் பேசும்போது, இன்றிலிருந்து 2031-32 வரை இந்தியாவின் அணுசக்தித் திறன் 20 மடங்காக உயர்ந்தாலும் நாட்டின் மொத்தத் தேவையில் அணுசக்தியின் பங்கு 4-6.4% மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடுகிறது. அதாவது, அணுசக்தி எக்காலத்திலும் நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு தீர்வாகாது என்பது நிதர்சனமான உண்மை.
123 ஒப்பந்தம் தொடர்பான எனது பழைய பதிவு இங்கே, வாசித்து விட்டுத் தொடரவும்.
http://balaji_ammu.blogspot.com/2007/12/star4.html
இதில் நமது டிவி மீடியா அடிக்கும் கூத்தைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது! இந்த ஒப்பந்தம் குறித்த சாதக/பாதகங்கள் சரியாக எடுத்துக் கூறுவதில்லை. மீடியாவின் அமெரிக்க ஜால்ரா காதைக் கிழிக்கிறது. இவ்விஷயத்தில் இடது சாரிகள் எடுத்துள்ள நிலைப்பாடு சரியானது என்பது தான் என் கருத்து. மேலும், இதுவரை நடந்துள்ள காங்கிரஸ்-இடதுசாரி ஆலோசனைக் கூட்டங்களில், காங்கிரஸ் இந்த ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருந்திருப்பது, மிகுந்த சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்காக, இடதுசாரியை கழட்டி விடத் துணிந்துள்ள ஆளும் கட்சி, சமாஜ்வாடி கட்சியின் காலில் விழத் தயாராக இருப்பது, உச்சபட்ச காமெடி :) சாகக் கிடக்கும் அமெரிக்க அணுஆயுதத் தொழில் புத்துணர்ச்சி பெற்று (அதாவது, இந்தியா அங்கிருந்து தொழில் நுட்பத்தையும், யுரேனியத்தையும் இறக்குமதி செய்வதின் வாயிலாக!) மீண்டும் வளர்வதற்கு இந்தியா எதற்கு உதவ வேண்டும் என்பது ஒரு முக்கியக் கேள்வி!
அடுத்து, தலைப்பில் "ஒபாமா"வும் வருவதால், அவர் மேட்டர் பற்றியும் எழுதணும் ! அதை
தனிப்பதிவாக இடுகிறேன், ஓக்கேவா ?
எ.அ.பாலா